Monday 6 November 2017

ஆர்.டி.ஜி.எஸ், என்.இ.எஃப்.டி ஆன்லைன் பணப் பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லை: எச்.டி.எஃப்.சி அறிவிப்பு

ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் மற்றும் தேசிய மின்னணு பணப் பரிமாற்றம் (RTGS, NEFT) ஆகியவற்றுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று எச்.டி.எஃப்.சி. வங்கி அறிவித்துள்ளது.

எச்டிஎஃப்சி வங்கியில் சேமிப்புக் கணக்குகள் அல்லது சம்பளக் கணக்குகள் வைத்திருப்பவர்கள் இன்னொரு வங்கிக் கணக்குக்கு ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் மேற்கொண்டால் நவம்பர் 1 முதல் அதற்குக் கட்டணம் கிடையாது என்று அந்த வங்கி அறிவித்துள்ளது.

முன்னதாக ஆர்டிஜிஎஸ் முறையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் பணப்பரிமாற்றம் செய்தால் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்டது. 5 லட்சத்துக்கு மேலான தொகை இன்னொரு வங்கிக்கணக்குக்கு பணப்பரிமாற்றம் மேற்கொள்ளும்போது ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதே போல் தேசிய மின்னணு பணப்பரிமாற்றமான என்.இ.எஃப்.டி. .வழியாக இன்னொரு வங்கிக் கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்யும் போது ரூ.10,000த்துக்கும் குறைவான தொகைக்கு ரூ.2.5 என்றும் 10,001லிருந்து 1 லட்சம் வரையிலான மின்னணு பரிமாற்றத்துக்கு ரூ.5-ம், ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்பவர்கள் கணக்கில் ரூ.15 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.

ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான என்.இ.எஃப்.டி பணப்பரிமாற்ற மின்னணு நடவடிக்கைக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இந்தக் கட்டணங்கள் கிடையாது.

டிஜிட்டல் நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக இந்தக் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக எச்.டி.எஃப்.சி. தெரிவித்துள்ளது. ஆனால் வங்கிக்கு நேரடியாகச் சென்று ஆர்டிஜிஎஸ், என்.இ,எஃப்.டி பரிவர்த்தனை செய்தால் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் கொண்டு வரப்பட்ட மாற்றங்களில், ஆண்டுக்கு 25 காசோலைகள் கொண்ட ஒரு காசோலைப் புத்தகத்துக்குக் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2 செக் புத்தகங்களை கட்டணமின்றி பெறலாம். கூடுதல் செக்புத்தகம் வேண்டுமானால் ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும் என்பதில் மாற்றமில்லை.

அதே போல் நிதிப்பற்றாக்குறையினால் காசோலை பவுன்ஸ் ஆனால் அதற்குக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும். முன்னதாக காலாண்டில் ரிடர்ன் ஆகும் முதல் காசோலைக்கு ரூ.350-ம், அடுத்தடுத்து நிதியில்லாமல் திரும்பும் காசோலைகளுக்கு ரூ.750-ம் வசூலிக்கப்பட்டு வந்தன. அதே போல் டெபாசிட் செய்யப்பட்ட செக்குகள் பணமாகாமல் திரும்பி வந்தால் ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த காசோலை தொடர்பான மாற்றங்களும் சம்பளக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் நிர்வகிக்கப்படாத ரெசிடண்ட் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் எச்.டி.எஃப்.சி. அறிவித்துள்ளது